காசிமேடு மீன் சந்தையில் கூட்டம் மீன்களின் விலை குறைந்ததால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி
இந்த நிலையில் கடந்த 31ம் தேதி (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை, தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி அமாவாசை, கந்த சஷ்டி விரதம் தொடங்கியது. இதனால், கடந்த 3 நாட்களாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் மீன்கள் வாங்க ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தினம் என்பதால் ஆழ்கடலுக்கு சென்ற அதிக அளவிலான விசைப்படகுகள் மீன் பிடித்து கொண்டு கரை திரும்பினர்.
அதனால், மீன் வரத்து அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் விடுமுறை தினம் என்பதால் மீன் வாங்க நேற்று அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் மீன்வாங்க காசிமேட்டிற்கு வந்திருந்திருந்தனர். பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதனால், காசிமேடு மீன் பிடி துறைமுகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. வரத்து அதிகமாக இருந்ததால் மீன்கள் விலை கடந்த வாரத்தை விட குறைந்து காணபட்டது. வஞ்சிரம், வவ்வால், சங்கரா உள்ளிட்ட அனைத்து வகை மீன்களும் ரூ.100 முதல் ரூ.200 வரை குறைந்திருந்தன.
குறிப்பாக கடந்த வாரம் ரூ.1200க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் கிலோ ரூ.1100க்கு விற்பனையானது. இதே போல தோல் நீக்கி துண்டுகளாக விற்கப்பட்ட வஞ்சிரம் கிலோவுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிலோ ரூ.1400க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ரூ.850க்கு விற்கப்பட்ட வவ்வால் மீன், ரூ.300 ஆக சரிந்து விற்பனையானது. இதே போல சங்கரா, கொடுவா, பால் சுறா, நண்டு, சீலா, இறால், கடமா மீன்கள் விலை ரூ.100 வரை குறைந்து விற்கப்பட்டது. இதனால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மீன் விலை குறைந்து காணப்பட்டதால் அதிக அளவிலான மீன்களை மக்கள் வாங்கி சென்றதை காண முடிந்தது.