கோவை ரயில் நிலையத்தில் தவறவிட்ட 50 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த ஆர்பிஎப் போலீஸ்
கோவை: கோவை சுந்தராபுரம் சாரதா மில் ரோடு முத்தையா நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (53). இவர் மனைவி, மகளுடன் சென்னை சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு கோவைக்கு ரயிலில் திரும்பினர். ரயில் கோவை 1வது பிளாட்பாரத்தில் வந்து நின்றதும் ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உடமைகளை இறக்கி பிளாட்பாரத்தில் வைத்தனர். அதில் ஒரு கைப்பையை மட்டும் எடுக்கமறந்து காரில் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு மணிகண்டன் 1வது பிளாட்பாரத்தில் ரோந்து சென்றபோது கைப்பையை கண்டெடுத்தார். அதற்கு யாரும் உரிமை கோராததால் திறந்து சோதனை செய்தார். அதில் 50 பவுன் நகைகள், ரூ.11 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் இருந்தது. அதை போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர் மகாராஜனிடம் ஒப்படைத்தார். இதற்கிடையே வீட்டிற்கு சென்ற ரவிக்குமார் நகைகள் வைத்திருந்த கைப்பை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மனைவியுடன் ரயில் நிலையம் சென்று தேடினார்.
அங்கு கைப்பை இல்லாததால், அதிலிருந்த செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது, போனை எடுத்த போலீசார் கைப்பை போலீஸ் ஸ்டேசனில் இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக மனைவியுடன் அங்கு சென்ற ரவிக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி 50 பவுன் நகை, 11 ஆயிரம் ரொக்கம், செல்போனுடன் கைப்பையை கொடுத்தனர். நேர்மையாக செயல்பட்ட ஏட்டு மணிகண்டனை சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் சவ்ரவ் குமார் பாராட்டி ரொக்க பரிசு வழங்கினார்.