திசையன்விளையில் இருந்து குமரிக்கு வரும் முந்திரிபழம்: கிலோ ரூ.100க்கு விற்பனை
நாகர்கோவில்: குமரி மாவட்டத்திற்கு சீசனுக்கு ஏற்ற பழங்கள் விற்பனைக்கு பல மாவட்டங்களில் இருந்த வந்துகொண்டு இருக்கிறது. தற்போது தர்பூசணி பழம் சீசன் களைகட்டியுள்ளது. திண்டிவனம், தூத்துக்குடி, ஒசூர் உள்பட பல இடங்களில் இருந்து தர்பூசணி பழம் வந்துகொண்டு இருக்கிறது. சீசன் தொடங்கியபோது கிலோ ரூ.20க்கு தர்பூசணி பழம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் தற்போது முந்திரிபழம் (கொல்லாம்பழம்) குமரிக்கு வரத்தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்திலும் முந்திரி மரங்கள் இருப்பினும், முந்திரி பழங்கள் விற்பனைக்கு வருவது இல்லை.
ஆனால் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து குமரிக்கு முந்திரி பழங்கள் விற்பனைக்கு வரதொடங்கியுள்ளது. குமரியில் விற்பனை செய்யப்படும் முந்திரி பழம் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் பல பழக்கடைகளில் முந்திரிபழம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் முந்திரிபழங்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.