அருவங்காடு பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊட்டி, நவ. 10: அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளி மற்றும் டெம்ஸ் பள்ளிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சுதா செல்வகுமார் மற்றும் சோபா ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 1 லட்சம் ஆண்டுகளில் 2023ம் ஆண்டு தான் அதிகபட்ச வெப்ப நிலை இருந்த ஆண்டு என அறிவியல் பதிவு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை ஒரே சீராக அதிகரித்து கொண்டிருந்த வேளையிலும் 2010க்கு பிறகான காலத்தில் பூமியின் வெப்ப நிலை மிக வேகமாக உயர தொடங்கியுள்ளது. இதற்கான காரணம் புவி வெப்பமே ஆகும். புவி வெப்பத்தில் 30 சதவீதம் சமுத்திரங்கள் பெற்றுள்ளன.
அதன் விளைவாக கடலின் மேற்பரப்பில் வெப்பத்தின் அளவு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக கடல் வாழ் இனங்களின் வாழ்க்கை சுழற்சி பெருமளவில் மாறி உள்ளது. மேலும் கடலில் உருவாகும் காற்று மண்டலத்தின் போக்கும் மாறி புதிய புதிய புயல்கள் அதிக அளவில் தோன்றியுள்ளது. இந்த பூமியினுடைய எதிர்காலத்தை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த கவலை அனைத்து சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளையும் சோர்வடையச் செய்துள்ளது.
விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் குறித்து உலக மக்களுக்கு என்ன செய்தியை சொல்வது என தெரியாமல் திகைக்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து இந்த பூமியை காப்பது உலக தலைவர்களின் கடமை அல்ல நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். எனவே அதிக மரங்களை நடவு செய்ய நாம் முன் வரவேண்டும். சுற்றுச்சூழலையும் இயற்கையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.