மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கில் நடிகர் சாகில் கான் கைது: சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி
இந்த வழக்கு தொடர்பாக சாகில் கானுக்கு கடந்தாண்டு டிசம்பரில் முதன்முதலில் சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் அவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, போலீசில் ஆஜராவதில் இருந்து தப்பித்து வந்தார். அண்மையில் இவரது முன்ஜாமீன் மனுவை அமர்வு நீதிமன்றம் நிராகரித்ததால் வேறு வழியின்றி போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 3 மணி நேரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர், இவர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறி அவரது மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. அதன் பிறகு, சாகில் கான் தலைமறைவானார்.
மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு போலீசார் சென்ற போது அவரை காணவில்லை. பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் அறிவித்தனர். பின்னர், சாகில் கான் சத்தீஸ்கரில் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 40 மணி நேரத்திற்கும் மேலாக சத்தீஸ்கர் போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய மும்பை சைபர் செல் சிறப்பு புலனாய்வு குழு போலீசார், சத்தீஸ்கரில் உள்ள ஜக்தால்பூரில் வைத்து சனிக்கிழமை அன்று சாகில் கானை கைது செய்தனர். அவரை மும்பைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.