சருமத்தை மென்மையாக்கும் ரோஸ் ஆயில் !
நன்றி குங்குமம் டாக்டர்
சருமப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றுதான் ரோஸ் எண்ணெய். இது சருமத்துக்கு பொலிவையும் அழகையும் தருகிறது என்பதோடு சருமத்தை ஊட்டச்சத்து மிக்கதாகவும், ஹார்மோன் சமநிலையை கொண்டும் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொள்வோம்.இது ரோஸ் ஆயில் அல்லது ரோஸ் ஓட்டோ என்றழைக்கப்படுகிறது. இது உயர்தரமான தூய்மையான ரோஜா மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.
இது மென்மையான மற்றும் விரிவான செயல்முறையில் ரோசா டமாசெனாவின் புதிய இதழ்களிலிருந்து நீராவி மூலம் வடிகட்டப்படுகிறது. 1 கிலோ ரோஸ் எண்ணெய் தயாரிக்க சுமார் 2 டன் ரோஜா இதழ்கள் தேவைப்படும். எனவே, இது விலை உயர்ந்த எண்ணெயும் கூட. தரமான எண்ணெயை வாங்கி பயன்படுத்தினால் சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
2010ல் செய்யப்பட்ட ஆய்வின்படி, எசென்ஷியல் ஆயில்களில் கிட்டத்தட்ட பத்து எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது ரோஸ் எண்ணெய் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கைகளை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தைம், லாவெண்டர் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற அத்தியாவசிய எண்ணெயை விட இது சிறந்தது. ரோஸ் எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் கொண்டுள்ளதால், முகப்பரு பாதிப்புள்ள சருமத்துக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு இது சருமத்துக்கு வேண்டிய ஊட்டச்சத்தையும் அளிக்கிறது. மேலும் சருமத்தில் இருக்கும் கிருமிகளை நீக்கம் செய்யும் திறனும் கொண்டுள்ளது.
முகத்தில் இருக்கும் வடுக்கள் மற்றும் பிற சரும பாதிப்புகளுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது ரோசாசியாவை குறைக்கவும் எரிச்சலை தணிக்கவும் உதவும். மேலும் ஒளிரும் சருமத்தை கொடுக்கும்.ரோஸ் எண்ணெயில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆஸ்ட்ரிஜெண்ட் முகத்தில் உள்ள துளைகளை அழிக்கவும் மற்றும் வெடிப்புகளை குறைக்கவும் செய்யும்.
இயற்கையான தூய்மையான ரோஜா எண்ணெய் சருமத்துக்கு நன்மை தரும் 50க்கும் மேற்பட்ட கலவைகளை கொண்டுள்ளன. இயற்கையாக நிகழும் இந்த கலவை மூலக்கூறுகளை ஆய்வகத்தில் உருவாக்க இயலாது.கூடுதலாக ரோஸ் ஆயில் ரோஜா மொட்டுக்களிலிருந்து தயாரிக்கப்படும் போது இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூடுதலாக கிடைப்பதோடு சருமத்துக்கு மிகவும் மென்மையை தருகிறது. இந்த ஊட்டச்சத்து இருந்தாலே சருமத்தின் பொலிவு மேம்படும்.
ரோஸ் ஆயிலில் ஆன்டிஏஜிங் பண்புகள் அதிகமாக உள்ளதால் இளமையான தோற்றத்தை கொடுக்கக் கூடியது. எனவே, ஆன்டி ஏஜிங் பண்புகளை கொண்டுள்ள அத்தியாவசிய எண்ணெய்களின் பட்டியலில் இது முதன்மையானது.தூய்மையான ரோஸ் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக அழகுப்படுத்தும் பண்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் முக்கியமான குணங்களில் ஒன்று சருமத்தை நீண்ட காலம் இளமையாக வைத்திருக்க செய்கிறது.
இதில் இருக்கும் சிட்ரோனெல்லோல் மற்றும் ஜரனியோல் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளின் தனித்துவமான கலவையால் தூய்மையான ரோஸ் எண்ணெய் வயதான அறிகுறிகளையும் முகச்சுருக்கங்களையும் போக்குகிறது. இது சருமத்தில் உண்டாகும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைக் குறைக்கிறது. இவைதான் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள், கோடுகள் போன்றவற்றுக்கு காரணம்.
ரோஸ் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கி அதன் வெளிப்புற அடுக்குகளில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் சருமத்தை சுத்திகரிக்க செய்கிறது. இது வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் சமநிலைப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது.
இதன் இயற்கை குணங்கள் குறிப்பாக வறண்ட மற்றும் உணர்திறன் சருமத்துக்கு நன்மை பயக்கும். இது இயற்கையான சரும பளபளப்பு மற்றும் பிரகாசத்தை மேம்படுத்துகிறது. மேலும் மேலோட்டமான வடுக்கள் போக்கவும் உதவுகிறது. பொதுவாக, சரும சுருக்கங்களை சரி செய்வது என்பது மிகவும் சவாலான விஷயம். ஆனால், ரோஸ் எண்ணெய் அதனை மிக எளிதாக்குகிறது. எனவே, ரோஸ் எண்ணெய் அழகு சாதன பொருட்களின் தயாரிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், இது இயற்கையான கலவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதனால் சுருக்கங்கள் மென்மையாக்கப்படுகிறது. சருமம் புத்துணர்ச்சியுடனும் இளமையாகவும் வைக்க செய்கிறது.ரோஸ் எண்ணெய் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளுடன் தொடர்புடைய தோல் அறிகுறிகளை போக்க உதவுகிறது. சருமத்துக்கு வேண்டிய புத்துணர்ச்சியை அளிக்கிறது.
சருமத்துக்கு வேண்டிய ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது சருமத்தின் ஊடுருவலை அதிகரிக்கிறது. இது சரும பராமரிப்பு பொருட்களில் சேர்க்கும் போது அது அதிக சத்துக்களை உறிஞ்சுவதற்கு சருமத்துளைகளை திறக்கிறது.அதேசமயம், இயற்கையான நச்சுத்தன்மையற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை தேர்ந்தெடுப்பது அவசியம் ஆகும். அப்படி தேர்ந்தெடுக்கும்போது, ரோஸ் எண்ணெய் நன்மைகளை மட்டுமே அதிகரிக்கும்.
தொகுப்பு: ரிஷி