தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி வாலிபர் படுகாயம்
தேன்கனிக்கோட்டை, ஜூலை 8: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காடுலக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மாதேஷ் (26), தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை, இயற்கை உபாதைக்காக அவரது தோட்டத்திற்கு சென்றார். அப்போது, அங்கு நின்றிருந்த ஒற்றை யானை அவரை தூக்கி வீசியது. இதில் இடுப்பு மற்றும் தோள்பட்டையில் படுகாயமடைந்த மாதேஷ் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதை கண்ட அந்த யானை, அங்கிருந்து சென்று விட்டது. பின்னர், மாதேஷை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், காடுலக்கசந்திரம் பகுதியில் சுற்றிதிரியும் ஒற்றை யானையை, அடர்ந்த காட்டிற்குள் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.