உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி வாலிபர் பலி
உளுந்தூர்பேட்டை, மே 28: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எறையூர் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மகன் லியோ ஆரோக்கியராஜ் (26). நேற்று இவர் ஒரு இருசக்கர வாகனத்தில் புல்லூர் குருக்கு ரோடு திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற கார் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த லியோ ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எடைக்கல் காவல் நிலைய போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.