மங்கலம்பேட்டை அருகே பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞர் கைது
மங்கலம்பேட்டை, ஆக. 31: மங்கலம்பேட்டை அருகேயுள்ள கலர்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மனைவி பிரியா(21). இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம இளைஞர் ஒருவர், குடிபோதையில் பிரியாவின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தாலிச் செயினை அறுக்க முயன்றுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத பிரியா கூச்சலிட்டுக் கொண்டே அந்த நபரை பிடித்து கீழே தள்ளி விட்டுவிட்டு, அவரிடமிருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் சென்று அங்கு மறைந்திருந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த இலுப்பையூர் காலனி பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் தேவா(19) என தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து தேவாவை கைது செய்தனர்.