திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வாலிபர் அதிரடி கைது
திருவண்ணாமலை, ஜூலை 23: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வெளி நாட்டுப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலையில் உள்ள கோயில் மற்றும் ஆஸ்ரமங்களை தரிசிப்பதற்காக, வெளி நாட்டு ஆன்மிக சுற்றுலா பயணிகள் சமீபகாலமாக அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அதன்படி திருவண்ணாமலைக்கு வந்திருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கிரிவலப்பாதையில் காளியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வெளி நாட்டுப் பெண் எதிர்த்து கூச்சலிட்டதால், அங்கிருந்து அவர் ஓட்டம் பிடித்துள்ளார். இதுதொடர்பாக, வெளிநாட்டுப் பெண் தூதரகத்துக்கு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், உரிய நடவடிக்கை எடுக்கும்படி தூதரகத்தின் சார்பில் திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை டவுன் ஏஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், காளியம்மன் கோயில் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவண்ணாமலை சந்தை மேடு பகுதியைச் சேர்ந்த சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் சேட்டு(38) என்பவர், வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேட்டு என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.