கஞ்சா விற்ற வாலிபர் கைது
மதுரை, ஏப். 12: மதுரை அண்ணாநகர் போலீசாருக்கு அப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ சோமு, சிறப்பு எஸ்ஐ சினிவாசகம் ஆகியோர் தலைமையில் ஏட்டு ஜெயராம் உள்ளிட்ட போலீசார் வண்டியூர் பகுதியில் ரோந்து சுற்றி கண்காணித்து வந்தனர். அப்ேபாது போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். அவரை விரட்டிச்சென்று போலீசார் மடக்கிப்பிடித்து கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அந்த பையில் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.விசாரணையில் அவர் மேலஅனுப்பானடியை சேர்ந்த செந்தில்நாதன் மகன் கணேசன்(23) என்பதும், சென்னையில் இருந்து 2 கிலோ கஞ்சாவை ரூ.20 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்து மதுரையின் கரும்பாலை, வண்டியூர் பகுதிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா, செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.