பேக்கரியை இரும்பு ராடால் உடைத்து சூறையாடிய வாலிபர் கைது
மேட்டுப்பாளையம், ஜூலை 15: மேட்டுப்பாளையத்தில் பேக்கரியை இரும்பு ராடால் உடைத்து ஆவேசமாக சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் ரங்கையா வீதியை சேர்ந்தவர் ராமன் (55). இவர் மேட்டுப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளில் 5 பேக்கரிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஊட்டி சாலையில் உள்ள இவரது பேக்கரியில் பெண் ஒருவர் பணி புரிந்து வந்துள்ளார். இது பெண்ணின் கணவர் பிரசாந்த்துக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் ராமனை செல்போனில் அழைத்த பிரசாந்த் என் மனைவியை ஏன் வேலைக்கு சேர்த்தீர்கள்? என கேட்க, நீ கடைக்கு வா பேசிக்கொள்ளலாம் என அவரும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடைக்கு இரும்பு ராடுடன் சென்ற பிரசாந்த் கடையின் முன்புறம் இருந்த கண்ணாடி கதவுகளை ஆவேசமாக அடித்து உடைத்துள்ளார். தொடர்ந்து, அங்கிருந்த கண்ணாடி ஷோகேஸையும் உடைத்துள்ளார்.மேலும்,கடையில் இருந்த பல்வேறு பொருட்களையும் சூறையாடி உள்ளார். இதனை தடுக்க சென்ற ஊழியர்களை தகாத வார்த்தையால் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து பேக்கரியின் உரிமையாளர் ராமன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேக்கரி ஷோகேஸ் மற்றும் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடிய மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் 2-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (29) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.