முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை, ஜூலை 23: மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 22.08.2025 முதல் 12.09.2025 வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், 25 வகையான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், 7 வகையான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், 37 வகையான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் என மொத்தம் ரூ.83.37 கோடி செலவில் நடைபெறவுள்ளது.
https://cmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் 16.08.2025க்குள் முன்பதிவு செய்து, தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை நேரிலோ அல்லது ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை 95140 00777 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.