மாவட்ட மைய நூலகத்தில் இன்று யோகா பயிற்சி
திருச்சி, ஜூலை 10: திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி மாவட்ட மைய நூலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 முதல் 11.30 மணி வரை குழந்தைகளுக்கான சதுரங்கப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியினை சங்கரா அளிக்க உள்ளார்.
மேலும், அன்றைய தினம் சிறார்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியாக காலை 10.30 முதல் 12.30 மணி வரை கிராப்ட் பேப்பர்களை கொண்டு ஓவியங்களை உருவாக்கும் “ஓரிகாமி” பயிற்சியினை அரசங்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அருணபாலன் பயிற்சி அளிக்க உள்ளார்.
அன்றைய தினமே காலை 10.30 மணி முதல் 1 மணி வரை பெற்றோர்களுக்கு சித்த மருத்துவர் காமராஜ் பங்கு கொண்டு “நலமும் வளமும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.