குரு பூர்ணிமாவை முன்னிட்டு ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் வழிபாடு
தஞ்சாவூர், ஜூலை 11: தஞ்சாவூர் வடவாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் ஆண்டுதோறும் குரு பூர்ணிமா அன்று குருவை தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம். நேற்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு மலர் அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடைபெற்றது. இத்தலத்தில் தரிசனத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. குரு பூர்ணிமா தினத்தில் குருவின் தரிசனம் கோடி புண்ணியம் தரும். வியாசர் அவதாரம் செய்த தினத்தில் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா வழிபாடு நடக்கிறது. நேற்றைய தினத்தில் குருவாக இருந்து வழிநடத்தும் ராகவேந்திர சுவாமிகளுக்கு குரு பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வெகுவிமரிசையாக நடந்தது. இவ்வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயாரை தரிசனம் செய்தனர்.