பட்டாசு வெடித்ததில் தொழிலாளி பலி இறுதி ஊர்வலத்தில்
திருவண்ணாமலை, ஜூலை 8: வேட்டவலம் அருகே நடந்த இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த கலந்தல்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் சசிகுமார்(37), கூலித்தொழிலாளி. இவர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த திருவானைமுகம் கிராமத்தில் விபத்தில் இறந்த உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதி ஊர்வலத்தில், சரமாரியாக பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, பட்டாசு வெடிகள் சிதறியதில், ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த சசிகுமார் மற்றும் திருவானைமுகம் கிராமத்தைச் சேர்ந்த நவீன், ஏழுமலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, மூன்று பேரும் திருவண்ணாமலை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமா உயரிழந்தார். மேலும், நவீன், ஏழுமலை ஆகியோர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற கூலித்தொழிலாளி பலியான சம்பவம் ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.