கோயில் திருவிழாவினை முன்னிட்டு பெண்கள் பால்குடம் ஊர்வலம்
திருவாடானை, ஜூலை 26: திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் பகுதியில் பெரியநாயகி அம்மன் மற்றும் கருப்பணசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூக்குழி திருவிழாவானது கடந்த 18ம் தேதியன்று காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து கடந்த ஏழு நாட்களாக ஒவ்வொரு நாளும் இரவு பெரியநாயகி அம்மன் கோயிலில் கும்மி கொட்டுதல் நிகழ்ச்சியுடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.
கடைசி நாளான நேற்று சின்னக்கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் எதிர்புறம் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம், காவடி எடுத்தலுடன் ஏராளமான பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று பெரியநாயகி அம்மன் கோயில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.அதன் பிறகு கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.