பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
ராமநாதபுரம், ஜூலை 28: ராமநாதபுரத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் நேற்று உயிரிழந்தார். ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் இல்லிமுள்ளி கிராம பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி காளியம்மாள்(56). நேற்று காலை காரைக்குடியில் இருந்து தனது மருமகள் உடன் காரைக்குடியில் இருந்து தனியார் பஸ்சில் ராமநாதபுரத்திற்கு வந்துள்ளார். இருவரும் பஸ்சில் வந்தபோது பஸ் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை நெருங்கியதும் பஸ் நடத்துனர் பிரபாகரன் கேணிக்கரை அருகே வந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் மாமியாரும், மருமகளும் பஸ் படிக்கட்டின் முன் பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது பஸ் திடீரென நிற்கவும் கேணிக்கரை வந்து விட்டதாக கருதி பஸ்சில் இருந்து காளியம்மாள் இறங்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ரத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி காளியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் ஓட்டுநர் செந்தில் முருகன், நடத்துநர் பிரபாகரன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.