கில்லூர் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற பெண் கவுன்சிலர் மனு
ஊட்டி, ஜூலை 15: கில்லூர் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேவர்சோலை பேரூராட்சி கவுன்சிலர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
கூடலூர் தேவர்சோலை பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் கிரிஜா மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேவர்சோலை பேரூராட்சி 13ம் வார்டு கில்லூர் பிரதான சாலையில் இருந்து எடலமூலா வழியாக மஞ்சுமூலா பகுதிக்கு சாலை கடந்த பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலையை இப்பகுதி பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் பயவன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் இச்சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.
இதனால், இந்த சாலையை பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வயதானவர்கள் இச்சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பள்ளி குழந்தைகளும் தவறி விழுந்து பாதிக்கின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம், இச்சாலையை கான்கிரீட் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.