கால்வாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட மண் அப்புறப்படுத்தப்படுமா? காந்தி நகர் மக்கள் கோரிக்கை
மானாமதுரை, ஜூன் 14: மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள காந்திநகரில் சாக்கடை கால்வாய் தாயமங்கலம் ரோடு உயர்த்தப்பட்டதால் சிறிய மழைக்கு கூட கழிவுநீருடன் மழைநீர் பெருக்கெடுத்து நகரில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி பெய்த மழையால் பெருகிய நீர் குடியிருப்புகளுக்குள் தேங்கியது. இதனால் வீடுகளை விட்டு வெளியறே முடியாமல் அப்பகுதியினர் சிரமத்திற்குள்ளாகினர். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வருவாய், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மக்களை கலைந்து போக செய்தனர்.
இதையடுத்து நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி, ஆணையாளர் ஆறுமுகம் ஆகியோர் நேற்று முன்தினம் தாயமங்கலம் ரோட்டில் உள்ள கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைப்பு பணிகளை துவக்கினர். நேற்று கால்வாயில் சேதமடைந்த கற்கள், கழிவுநீருடன் தேங்கிய மண்கசடுகள் ரோட்டில் கொட்டப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் வாரச்சந்தைக்கு வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. அதிக ேபாக்குவரத்து உள்ள இந்த சாலையில் தோண்டப்பட்ட கால்வாய் கழிவுகளை ரோட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.