ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றபோது பண்ருட்டி என்ஜினியர் வீட்டில் 25 பவுன், ₹65 ஆயிரம் திருட்டு சிசிடிவி ஹார்டு டிஸ்க்கையும் எடுத்து சென்றனர்
பண்ருட்டி, பிப். 6: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றபோது என்ஜினியர் வீட்டில் 25 பவுன், ₹65 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி, எல்என்புரம் வேதாந்த நகரை சேர்ந்தவர் அருந்ததி(60). இவரது 2 மகன்கள் வெளிநாட்டில் என்ஜினியராக உள்ளனர். அருந்ததியின் கணவர் இறந்த நிலையில், இவர் மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் எல்என்புரம் பகுதியில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் அருந்ததி வீட்டை பூட்டிவிட்டு மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் கோயிலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று காலை இவரது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அருந்ததி மற்றும் வெளிநாட்டில் உள்ள அவரது மகன்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கோயிலுக்கு சென்ற அருந்ததி வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ₹65 ஆயிரம், வெள்ளி பொருள்கள், சாமி சிலைகள், பட்டு புடவைகள் போன்றவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, செந்தில்குமார், குற்றப்பிரிவு போலீசார் ஹரிகரன், ஆனந்த், வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், கோயிலுக்கு சென்றதை நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.மர்ம நபர்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க திருடிய வீட்டில் சிசிடிவி கேமராவில் ஹார்டு டிஸ்க்கை எடுத்துள்ளனர். மேலும் அருகில் உள்ள ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் வீட்டில் சிசிடிவி கேமரா ஒயர்களை துண்டித்து அந்த வீட்டிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா விசாரணையை முடுக்கிவிட்டார். கடலூரில் இருந்து மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். திருட்டில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.