தாட்கோ வழங்கும் அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
விருதுநகர், ஜூலை 31: தாட்கோ வழங்கும் அழகுகலை மற்றும் சிகை அலங்கார பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: தாட்கோ மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி பெற 8ம்வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். 18 முதல் 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள். சென்னையில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் பயிற்சியை முடிக்கும் இளைஞர்களுக்கு தனியார் அழகு நிலையங்களில் பணியாற்ற வேலை வாய்ப்பு வழங்கி துவக்க ஊதியமாக ரூ.10ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம். பயிற்சி பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலம் வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து பயன்பறலாம்.