கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர்கள் சங்கம் போராட்டம்
விருதுநகர், ஜூலை 30: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்.
வருவாய் கிராம ஊழியர்கள், சிவில் சப்ளை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி, ஓய்வூதிய நிலுவைகளை உடன் வழங்க வேண்டும்.
போக்குவரத்து கழகங்களின் வரவு செலவு வித்தியாசத்தை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி ஓய்வூதியம் பெறுபவர்களில் 70 வயது, 80 வயது நிறைவடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கம்யூட்டேசன் பிடித்தம் செய்யும் ஆண்டை 12 ஆக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.