சிவகாசி அருகே குவாரியில் மின்வயர் திருடிய 3 பேர் கைது
சிவகாசி, செப்.27: கல் குவாரியில் மின்வயர் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே மாரனேரி நதிக்குடியில் உள்ள கல்குவாரியில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டாரின் வயரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து அந்த கல்குவாரியின் மேனேஜர் லட்சுமணன் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதே போல் மாரனேரி அருகே துரைச்சாமிபுரம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்டு வந்த மின்மோட்டாருக்கு செல்லும் வயரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் ஆகும். இது குறித்து ஊராட்சி செயலர் மாதவன் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் மம்சாபுரம் இந்திரா காலனியை சேர்ந்த முருகானந்தம்(28), அஜித்குமார்(24), பாண்டீஸ்வரன்(21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் 2 சம்பவங்களிலும் இவர்கள் 3 பேர் தான் ஈடுபட்டது தெரிய வந்தது.