தீப்பிடித்து எரிந்த வேன்
சிவகாசி, ஆக.27: சிவகாசி சுந்தரம் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் மகன் விஷால்(27). இவர் சிவகாசி - சாத்தூர் செல்லும் சாலையில் பொன்பாலாஜி நகரில் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு பட்டாசு பண்டல்களை ஏற்றிக்கொண்டு செல்ல பயன்படுத்தும் லோடு வேனை பட்டாசு கடையின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார். நேற்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் லோடுவேன் முன்பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது.
தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். ஆனால் லோடுவேன் முற்றிலும் எரிந்து நாசமானது. மின் வயரில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிவகாசி கிழக்குப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே சுப்பிரமணியபுரத்தில் கம்பி மத்தாப்பு பட்டாசு ஆலை செயல்படுகிறது.
ஆலையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பட்டாசு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த கழிவுகள் அதிக வெப்பத்தின் காரணமாக நேற்று திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. வெயிலில் காய்ந்த செடிகள் முட்புதர்களில் தீ பரவ தொடங்கியது. வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.