அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
விருதுநகர், செப்.25: தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் விருதுநகர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும்,
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார்.