பணம் திருடியதாக நாடகம் டிரைவர் உள்பட இருவர் கைது
சிங்கம்புணரி, அக்.24: மதுரையில் இயங்கி வரும் கடலை மிட்டாய் கம்பெனியில் டிரைவராக தங்கப்பாண்டியன்(30) வேலை செய்து வருகிறார். மதுரை ஐராவதநல்லூர் எம்ஜிஆர் காலனியில் வசித்து வரும் இவர், கடந்த 17ம் தேதி கடலை மிட்டாய் விற்ற பணத்தை வசூல் செய்து கொண்டு திருப்பத்தூரில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எஸ்எஸ் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனது வாகனத்தை திசை திருப்பி வசூல் பணம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக எஸ்எஸ்.கோட்டை போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தங்கப்பாண்டியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கப்பாண்டியன் அவரது நண்பர் மேலூர் எட்டிமங்களம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(21) இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.