நாய், பூனை கடித்தால் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்
விருதுநகர், நவ. 21: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: ரேபிஸ் என்பது விலங்குகளின் உமிழ் நீரில் இருந்து மனிதர்களுக்கு விலங்குகள் கடிப்பதன் மூலமாகவும், கீறல்கள் மூலமாகவும் பரவும் ஒரு கொடிய வைரஸ் நோயாகும். தெருநாய்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தாலோ, கீறல்கள் ஏற்படுத்தினாலோ காயத்தை சோப்பு போட்டு குழாய் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ரேபிஸ் இம்யுனோகுளோபுலின் (காயத்தின் தீவிர தன்மையை பொறுத்து) உடனடியாக போட்டு கொள்ள வேண்டும். ரேபிஸ் தடுப்பூசியானது அட்டவணைப்படி 0, 3, 7, 28 ஆகிய நாட்களில் போட வேண்டும். இல்லையெனில், முழுமையான பலன் கிடைக்காது. நான்கு தவணை போட்டு முடிக்காதவர்களுக்கும் கூட ரேபிஸ் நோய் தாக்கம் ஏற்படும்.