15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர், செப்.19: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் விஜயபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு நியமனத்தின் போது தேவையே தவிர 20 ஆண்டுகள் பணியாற்றி கொண்டிருக்கும் ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டுமென்பது அநீதியாகும்.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.