டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்
சிவகாசி, ஆக.18: சிவகாசி அருகே டிராக்டர் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி அருகே பி.பாறைப்பட்டியை சேர்ந்தவர் போத்திராஜா(45). இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று கொத்தனேரியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அஜித், சதீஷ், வேல்முருகன் ஆகியோர் போத்திராஜாவிடம் பணம் கேட்டுள்ளனர்.
இதற்கு போத்தி ராஜா பணம் கொடுக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜித் பீர்பாட்டிலால் போத்திராஜா தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த மற்றவர்களும் போத்திராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அஜித் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.