வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் பூக்குழி திருவிழா
வத்திராயிருப்பு, அக். 16: வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கடந்த அக்.7ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. ஒரு வார காலம் விரதம் இருந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் பூக்குழி திருவிழாவானது நேற்று காலை அம்மன் சிங்க வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலத்துடன் தொடங்கியது. பின்னர் மதியம் 1 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் விரதம் இருந்த பக்தர்கள் வரிசையாக பூக்குழி இறங்கினர். மதியம் 2 மணிக்கு பூக்குழி நிகழ்ச்சி முடிந்த பின்னர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிகேஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.வத்திராயிருப்பு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் என 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.