வெம்பக்கோட்டை அருகே கார் மோதி வாலிபர் பலி: 2 பேர் காயம்
ஏழாயிரம்பண்ணை, அக்.12: வெம்பக்கோட்டை அருகே, கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி எஸ்பிஎம் தெருவை சேர்ந்தவர் கரண் பாண்டியன் (25). தாயில்பட்டி கோட்டையூரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). நேற்று முன் தினம் இரவு, இருவரும் மடத்துப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பகுதியில் எதிரில் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கரண் பாண்டியன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
மேலும் அப்பகுதியில் வந்த டூவீலர் ஒன்று விபத்துக்குள்ளான கார் மீது மோதியது. இதில் டூவீலரை ஓட்டி வந்த தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (23) என்பவரும் காயமடைந்தார். தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக தாயில்பட்டி, கட்டணஞ்சேவல் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ராமமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.