ராஜபாளையத்தில் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ராஜபாளையம் டிச.9: ராஜபாளையம் அருகே அடிப்படை வசதி கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மேல ராஜகுலராமன் ஊராட்சி பகுதியில் உள்ள என்.கிருஷ்ணாபுரம் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளதாகவும், புதிய குடிநீர் தொட்டி அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, அப்பகுதி கிராம மக்கள் மேலராஜகுராமன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.