நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சுழி, அக்.4: நரிக்குடி பேருந்து நிலையத்தில் கலைநிகழ்ச்சியின் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் சார்பில், நரிக்குடி மற்றும் வீரசோழன் பேருந்து நிலையத்தில் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், தடுக்கும் வழிமுறைகள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நம்மை சுற்றியுள்ள சமூகம் காட்ட வேண்டிய அக்கறைகள் ஆகியவை குறித்து தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் மூலமாக எளிமையான முறையில் பொதுமக்களுக்கு புரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை நரிக்குடி பேருந்து நிலையத்தில் கூடி இருந்த பொதுமக்கள், அந்த வழியாக சென்ற பயணிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.