மூளைச் சாவு அடைந்த ஆட்டோ டிரைவர் உடலுறுப்பு தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு
விருதுநகர், ஆக.2: சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலுறுப்புகள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 4 பேர் பயனடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சங்கரேஸ்வரன்(46). இவர், கடந்த 29ம் தேதி நடந்த சாலை விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச் சாவு அடைந்தார்.
பின்னர் அவருடைய உறவினர்களின் ஒப்புதலுடன் அவருடைய உடல் உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், தோல், கண் போன்றவை உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தானமாக பெறப்பட்டது. இந்த உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு நான்கு பேர் பயனடைந்துள்ளனர். அவரது உடலுறுப்பு தானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெய்சிங், மயக்கவியல் துறை தலைவர் சேகர், மருத்துவ குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மரியாதைக்கு பின் உரியவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.