விஸ்வநத்தம் ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு போராட்டம்
சிவகாசி, நவ. 1: சிவகாசி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி முருகன் காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தும் உரிய பலன் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முருகன் காலனியில் அடிப்படை வசதி செய்து தர கோரி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனால் முருகன் காலனி பகுதியில் 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுனர். நேற்று காலை 9 மணிக்கு பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை மறியல் செய்ய முயன்ற போது அங்கு வந்த சிவகாசி கிழக்கு போலீசார் மற்றும் சிவகாசி யூனியன் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் முருகன் காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.