எஸ்ஐஆர் பணி நெருக்கடியைக் கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர், நவ.18: விருதுநகரில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப்பணி நெருக்கடியைக் கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்களின் கூட்டமைப்பு சார்பில், வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப்பணி நெருக்கடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் உரிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்பந்தம் செய்வதால் வருவாய்த்துறை அலுவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
பணி நெருக்கடிகள் அதிகரிப்பு, ஆய்வு கூட்டம் என்ற பெயரில் சார்நிலை அலுவலர்களை வதைப்பதை கைவிட வேண்டும், உரிய கால அவகாசம் வழங்க வேண்டும், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் உள்பட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும், கூடுதல் பணிப்பழுவை கருத்தில் கொண்டு ஒருமாத கால மதிப்பூதியம் வழங்க வேண்டும், இந்திய தேர்தல் ஆணையம் தலையிட்டு சுமூக சூழலை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.