ராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு சாலையை சீரமைக்க வேண்டும்: நகராட்சி ஆணையரிடம் மனு
ராஜபாளையம், டிச.13: ராஜபாளையம் 31வது வார்டு திருவனந்தபுரம் தெருவில் உள்ள ஐந்து தெருக்களும் குண்டும் குழியுமாக படுமோசமான நிலையில் இருந்து வருகிறது. தென்காசி சாலையில் இருந்து சங்கரன்கோவில் சாலைக்கு புறவழிச் சாலைகள் இல்லை. இதன் காரணமாக அப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். நகராட்சியில் புதிதாக சாலை அமைத்து தரும்படி கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அவர்கள் பேவர் பிளாக் கற்கள் மட்டுமே பதிக்க இயலும் என கூறி சாலை வசதி ஏற்படுத்தி தர மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் தார்ச்சாலை அல்லது சிமெண்ட் சாலை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று முன்தினம் ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் நாகராஜனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். உடனடியாக அப்பகுதிக்கு தார்ச்சாலை அல்லது சிமெண்ட் சாலை அமைத்து தரும்படி வலியுறுத்தினர். இம்மாத இறுதிக்குள் புதிய சாலைகள் அமைத்து தரப்படும் என ஆணையர் உறுதியளித்தார்.