பள்ளி மாணவர்கள் திடீர் மாயம்
சிவகாசி, அக்.11: சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் வீரதினேஷ் (16). இவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். செந்தில்குமார் உறவினர் மகனான அருண்பிரசாத் (15) என்பவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் ஒன்றாக இருந்த வீரதினேஷ், அருண்பிரசாத் இருவரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் செந்தில்குமார் வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் படிக்க பிடிக்கவில்லை, அதனால் எங்களை தேட வேண்டாம் நாங்கள் வீட்டை விட்டு செல்கிறோம் என்று எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. கடிதத்தை கைப்பற்றிய சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். படிக்க பிடிக்காமல் மாணவர்கள் மாயமான சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.