பட்டாசு ஆலை தீ விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
ஏழாயிரம்பண்ணை, அக்.9: வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி மகன் பாண்டியராஜ்(27). இவர் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள இ.ரெட்டிபட்டியில் இருந்து சிங்கம்பட்டி செல்லும் சாலையில் உள்ள பட்டாசு அலையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 13ம் தேதி வழக்கம்போல் பட்டாசு ஆலைக்கு பணிக்கு சென்றார். அன்று மதியம் பட்டாசு ஆலையில் மருந்து கலவை செய்தபோது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பாண்டியராஜன் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இத்தனை நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சங்கரநாராயணன் மற்றும் ஆலையின் போர்மேன் மனோஜ் குமார் ஆகிய இருவர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.