கோயில் காவலாளிகள் கொலை வழக்கு 2 பேரை குண்டாசில் கைது செய்ய உத்தரவு
விருதுநகர், டிச. 4: ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுகபுத்ரா நேற்று உத்தரவிட்டார். ராஜபாளையம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயிலில் கடந்த நவம்பர் 11ம் தேதி இரவு நேர காவலாளிகளான பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் நாகராஜ், முனியசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, எஸ்பி கண்ணன் பரிந்துரைத்தார். அதன் பேரில் நாகராஜ், முனியசாமி ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.