பொங்கல் திருவிழாவில் இரட்டைமாட்டு வண்டி பந்தயம்
கமுதி, ஜூலை 29: கமுதி அருகே பொந்தம் புளி வாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் விழாவில், இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கமுதி அருகே பொந்தம்புளி கிராமத்தில் வாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் கோயில் முன்பு ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் வானவேடிக்கை மேளதாளம் முழங்க, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, இறுதியில் அப்பகுதியில் உள்ள கண்மாயில் முளைப்பாரி கரைக்கப்பட்டது.
நேற்று திருவிழாவை முன்னிட்டு சின்னமாடு, பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 மாட்டு வண்டிகள் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்து சென்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தை சாலையில் இருபுறமும் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.