நோய் இல்லையென உறுதி செய்ய புதிதாக வாங்கும் ஆடுகளை குறைந்தது; 2 வாரம் தனியாக வைக்க வேண்டும்: கால்நடை பராமரிப்புத்துறை அட்வைஸ்
விருதுநகர், ஜூலை 29: புதிதாக வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு வாரங்கள் தனியாக வைத்து நோய் ஏதும் இல்லையென உறுதி செய்த பின்னரே மந்தையில் சேர்க்க வேண்டும் என, கால்நடை பராமரிப்புத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. ஆட்டுக்கொல்லி நோய் ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் கொடிய நோயாகும். இந்நோய் மொரிபீ வைரஸ் எனும் வகையைச் சேர்ந்த வைரஸ் கிருமியால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்தியாவில் அறவே ஒழிக்கப்பட்டுவிட்ட வெக்கை நோய் வைரஸ் கிருமியும் இந்த வகையைச் சார்ந்தது. இந்த நோயின் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு 3 அல்லது 4 நாட்கள் அதிக அளவிலான காய்ச்சல் நீடிக்கும். சோர்வுடன் தீனி உட்கொள்ளாத நிலையை அடையும். மூக்கில் இருந்து சளி வடிந்து உறைந்திருக்கும். கண்களில் பூளை தள்ளும். வாயின் உட்புறங்கள், ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீர் சுரக்கும்.
கழிச்சல், இருமல், குட்டிகளில் அதிக அளவில் இறப்பு இருக்கும். நோய் உள்ள இடங்களில் இருந்து ஆடுகள் வாங்கி புதிதாக மந்தையில் சேர்த்தால் பிற ஆடுகளுக்கு இந்நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும். நோய் பாதித்த ஆடுகள் இருமும் போது வெளிப்படும் சளி மற்றும் உமிழ்நீர் போன்றவை காற்றில் கலந்து மற்ற ஆடுகளின்மீது படும்போது நோய் தொற்றிக் கொள்கிறது. நோயுற்ற ஆடுகளில் கண் மற்றும் மூக்கிலிருந்து வடியும் நீர், சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றால் இந்நோய் பரவும். நோயினால் தாக்கப்பட்ட ஆடுகளை உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஆட்டுக் கொட்டில்களையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். புதிதாக வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு வாரங்கள் தனியாக வைத்து நோய் ஏதும் இல்லையென உறுதி செய்த பின்னரே மந்தையில் சேர்க்க வேண்டும். ஆட்டுக்கொல்லி நோய் வராமல் இருக்க ஆண்டிற்கொருமுறை ஆடுகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசிகள் போட வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.