மழைநீர் செல்ல வாறுகால் அமைக்கும் பணி விறுவிறுப்பு
சாத்தூர், ஜூலை 29: சாத்தூர் நன்குவழிச்சாலையில் மழைநீர் செல்ல வாறுகால் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதுரை-கன்னியாகுமாரி நான்குவழிச் சாலையில் படந்தால் விலக்கு பகுதி உள்ளது. இங்கு நான்கு வழிச்சாலை குறுக்காக பெரியார் நகர், ஆண்டாள்புரம், அண்ணாநகர், படந்தால், தாயில்பட்டி ஆகிய பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி பலியாகியும், பலத்த காயமடைந்தும் வந்தனர். எனவே விபத்தை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என ஒன்றிய சாலை போக்குவரத்து துறையிடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் அமைக்க ஒன்றிய சாலை போக்குவரத்து துறை ரூ.33 கோடி நிதி ஒதுக்கிடு செய்தது. அதன் முதற்கட்ட பணியாக படந்தால் சந்திப்பு முதல் வைப்பாறு மேம்பாலம் வரை நான்குவழிச்சாலையின் இருபகுதியில் மழை நீர் செல்ல வாறுகால் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.