பிஎஸ்என்எல்இயு சங்கத்தினர் போராட்டம்
விருதுநகர், நவ. 28: விருதுநகர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்.என்.எல்.இயு சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதில், ஒன்றிய அரசானது, பி.எஸ்.என்.எல் லில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். சட்டப்படி 2017 ஜனவரி 1 முதல் ஓய்வூதியத்தில் மாற்றம் செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 5 ஜி சேவைகளை உடனடியாக வழங்க வேண்டும். 2வது விருப்ப ஓய்வுத் திட்டத்தை கைவிட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் இபிஎப், இஎஸ்.ஐ உள்ளிட்ட சமூக பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் இளமாறன் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் பேசினார். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், ரவீந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.