தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளன: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
திருச்சுழி, செப்.14: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: நான்காண்டு கால ஆட்சியில் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்கள் குறிப்பாக கல்வி, சுகாதாரம் இரண்டிலும் மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு இருக்கிறது. நம்மைக் காக்கும் 48, இன்னுயிர் காப்போம் திட்டம், நலம் காக்கும் மருத்துவம் போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதாக உள்ளது. இந்த திட்டங்கள் மக்களிடம் பாராட்டை பெற்று மக்களிடையே நம்பகமான திட்டமாக இந்தியாவிலேயே முதன்மை இடம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக முதல்வர் திகழ்கிறார் என்றார்.
பின்னர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், இசலி ரமேஷ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயசிங், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மாரிமுத்து, மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.