பி.சி, எம்பிசி, சீர்மரபினர் கல்வி உதவித்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர், டிச.12: பிசி, எம்பிசி, சீர்மரபினர் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை, முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
2025-26ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க மாணவ, மாணவியர் கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS எண் மூலம் http://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 31.12.2025 கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.