அருப்புக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு
அருப்புக்கோட்டை, டிச. 12: அருப்புக்கோட்டை அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனிபாண்டி (49). டிரைவர். இவரது மகன் பார்த்தசாரதி (25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜென்டாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை முனிபாண்டியும், அவரது மனைவியும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இரவில் பார்த்தசாரதியும், அவரது மனைவியும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் இவர்களது வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் அதே ஊரை சேர்ந்த சக்தி, சிவா, தினேஷ், மணிமாறன், சந்துரு உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே, பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்ய கோரி முனியாண்டி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அருப்புக்கோடி- பந்தல்குடி சாலையில் ராமசாமிபுரம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏஎஸ்பி மதிவாணன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இந்த மறியலால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து டவுன் விஏஓ சூர்யா கொடுத்த புகாரின் பேரில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக முனிபாண்டி, பார்த்தசாரதி, மணிகண்டன், உமா மகேஸ்வரி உட்பட 100 பேர் மீது அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.