அருப்புக்கோட்டை அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
அருப்புக்கோட்டை, டிச. 11: அருப்புக்கோட்டை அருகே நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனிபாண்டி (49). டிரைவர். இவரது மகன் பார்த்தசாரதி (25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை முனிபாண்டியும், அவரது மனைவியும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனால் இரவில் பார்த்தசாரதியும், அவரது மனைவியும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டில் உள்ள குளியறையில் இருந்து பலத்த சப்தம் கேட்டுள்ளது. ஆனால், தூக்க கலக்கத்திலிருந்த இருவரும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்த முனிபாண்டி மற்றும் அவரது மனைவி குளியலறையில் வெண்டிலேட்டர் கண்ணாடி உடைந்து கிடப்பதையும், பெட்ரோல் வாடையுடன் உடைந்த நிலையில் தரையில் பாட்டில் ஒன்று கிடப்பதையும் பார்த்தனர். மேலும் சுவர் மற்றும் வெண்டிலேட்டரில் கரும்புகை படிந்துள்ளதையும் பார்த்து அவர்கள் அதிர்ச்சிடையடைந்தனர்.
இதுகுறித்து முனிபாண்டி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். இதில் வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மாலை இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய கோரி முனிபாண்டி குடும்பத்தினர், உறவினர்கள் அருப்புக்கோடி- பந்தல்குடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் ஏஎஸ்பி மதிவாணன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.