வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம்
விருதுநகர், ஆக. 3: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வணிகவரித்துறை சார்பில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை குறித்து சிறு, குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் மூலம் சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்கள் ஆண்டுக்கு விற்று முதல் ரூ.40லட்சத்திற்கு குறைவாக உள்ள வணிகர்கள் வணிகர் நல வாரியத்தின் பலனை பெறும் வகையில் உறுப்பினர் ஆவதற்கான கட்டணத் தொகையான ரூ.500 செலுத்துவதில் இருந்து 1.6.2025 முதல் 31.11.2025 வரை 6 மாதத்திற்கு விலக்களிப்படுகிறது. தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.
வணிகர் நலவாரியத்தில் ரூ.40 லட்சத்திற்கு கீழ் வணிகம் செய்யும் அனைத்து வணிகர்களும் கட்டணமில்லாமல் உறுப்பினர்களாக சேரலாம். மற்ற வணிகர்கள் ரூ.500 கட்டணத்துடன் சேரலாம். ஜி.எஸ்.டி சடடத்தில் பதிவு எண் பெற்ற வணிகர்கள் மற்றும் ஜிஎஸ்டி பெறாத வணிகர்கள் உறுப்பினராக சேரலாம். அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், முகவரிசான்று, தொழில் உரிமம் சான்று, உள்ளிட்ட விவரங்களை அளித்து உறுப்பினராகலாம்.
வணிகர் நலவாரியத்தில் சேரும் உறுப்பினர்களுக்கு குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, உறுப்பினரின் வாரிசுகளுக்கு விளையாட்டு நிதியுதவி, தீ விபத்து நிவாரண உதவி, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதி உதவி, சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, திருமண உதவித்தொகை, விபத்துக்கால உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு இணை ஆணையர், துணை ஆணையர், வணிகவரித்துறை அலுவலகம், மதுரை ரோடு, விருதுநகர், துணை ஆணையர், ரிசர்வ்லைன், சாட்சியாபுரம், சிவகாசி ஆகிய முகவரிகளிலும் www.tn.gov.in/tntwb என்ற இணையதளம் மூலமாவும் அறியலாம், என்றார்.
கூட்டத்தில், கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி வணிகர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி, இணை ஆணையர் மாரியப்பன், துணை ஆணையர் மகபூப் இப்ராகிம், உதவி ஆணையர் செல்வ பிரியா, வரிகோட்ட அனைத்து தலைமை அலுவலர்கள், சிறு, குறு வணிகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.